Sunday 17 September 2017

நீண்ட கால சேமிப்பு யோசனைகள்

நீண்ட கால சேமிப்பு யோசனைகள்



* இன்றைய சேமிப்பு வருங்காலத்துக்கான ஊதியம். வருங்காலத் தேவைக்காக இன்றைய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து சேமிக்கிறோம். இந்தத் தொகை எத்தனை அதிக லாபத்தை -வட்டியை- ஈட்டித் தருகிறது என்பதைக் கருத்தில் கொண்டுதான் சேமிப்புகளில் ஈடுபடுகிறோம்.

* நீண்ட கால அளவிலான சேமிப்புகளுக்குப் பல வழிகள் இருந்தாலும், சிறந்தது என்பது அவரவர் தேவைக்கேற்பதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

சேமிப்பு திட்டங்களில் மிகவும் எளிமையானது, எல்லோருக்கும் தெரிந்தது - வங்கிகளில் நீண்ட கால வைப்புத் தொகை -ஃபிக்ஸட் டெபாசிட்- மூலமாக சேமிப்பது.

இதற்கு அடுத்தபடியாகப் பிரபலமாக இருப்பது, ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.

மேலும், தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி.) போன்ற அரசு கடன் பத்திரங்கள், தபால் துறையின் வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.) ஆகிய திட்டங்கள் மிக நீண்ட காலமாக இருந்து வரும் திட்டங்கள்.

* தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் சேமிப்புதான். நீண்ட கால அடிப்படையில் அது நமக்கு ஈட்டித் தரும் லாபத்தைக் கருதித்தான் அதில் பணத்தைப் போடுகிறோம்.

* பங்கு வர்த்தகம் தீவிர ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது; அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய வகையைச் சேர்ந்த முதலீடு; எங்கே முதலீடு செய்வது என்பது பற்றி நாமே சரியான முடிவுகள் எடுத்து, அவ்வப்போது சில பங்குகளை வாங்குவது அல்லது கையிலுள்ள சில பங்குகளை விற்பனை செய்வது என்று, நாம் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.அதில் நேரடியாக நமக்கு அனுபவம் இல்லாவிட்டால், நம்பிக்கையானவர்களின் ஆலோசனை பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.குறிப்பிட்ட வட்டி வருவாயை ஈட்டித் தரும் வைப்புத் தொகைத் திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன.

* இதைத் தவிர, அரசின் நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது. இதில் அரசு கடன் பத்திரத் திட்டங்களும் அடங்கும்.
பெண் குழந்தைகளை மையப்படுத்தி மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சேமிப்புத் திட்டம் "சுகன்யா ஸம்ருத்தி'. பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் நீண்ட கால அடிப்படையில் சேமிப்பதற்கு சிறந்த திட்டம் என்று கருதப்படுகிறது.

* தபால் துறையின் வருங்கால வைப்பு நிதியான பி.பி.எஃப். என்பது 15 ஆண்டு காலத் திட்டமாகும். இது தற்போது 8 சதவீத வட்டியைத் தருகிறது. முதிர்வுத் தொகைக்கு வருமான வரி கிடையாது. 15 ஆண்டு காலம் நிறைவடைந்த பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளலாம்.இளம் வயதிலேயே இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், மிகுந்த பலனைத் தரும். இதுபோன்ற நீண்ட கால முறையில், நமது செüகரியத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் கூடக் குறைய சேமிப்புத் தொகையை செலுத்தும் திட்டம் வேறு எதுவும் இல்லை.

* தபால் நிலையத்தில் 100 ரூபாயைக் கொண்டு இந்தத் திட்டத்தில் சேரலாம். அதன் பிறகு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் சேமிக்கலாம்.

* கூட்டு வட்டி முறையில், ஆண்டுதோறும் வட்டி திரண்டு வரும். இந்த சேமிப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை மீது வருமான வரி கிடையாது. திட்டத்தில் சேர்ந்த மூன்றாம் ஆண்டிலிருந்து இதிலிருந்து கடன் பெறும் வசதியும் உண்டு. ஏழாம் ஆண்டிலிருந்து சேமித்த தொகையின் ஒரு பகுதியைத் திரும்பப் பெற முடியும். ஆண்டுதோறும் சேமிப்பு செய்யும் காலத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவில் வரிச் சலுகையும் பெறலாம்.

* பிரதான தபால் நிலையங்களில் பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கை சுலபமாகத் தொடங்கலாம்.

* என்.எஸ்.சி.

தேசிய சேமிப்பு பத்திரமான என்.எஸ்.சி.யின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். பத்து ஆண்டுகளில் முதிர்வு அடையும் பத்திரங்களும் உண்டு. இந்த சேமிப்பு பத்திரங்கள் தற்போது 8 சதவீத வட்டியை ஈட்டித் தருகின்றன.

இந்த சேமிப்புத் திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.வங்கிகளில் இந்தப் பத்திரங்களை அடமானம் வைத்துக் கடன் பெற முடியும்.

ஐந்து ஆண்டு கால முதிர்வுடன் வங்கி வைப்புத் தொகைத் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் 7.75 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை நமது சேமிப்புத் தொகைக்கான வட்டி பெறலாம். முதிர்வுத் தொகை வரி விதிப்புக்கு உள்பட்டது.

மூத்த குடிமக்களுக்கு என தனியாக சேமிப்புத் திட்டம் உள்ளது. ஐந்து ஆண்டு முதிர்வுக் காலம் உள்ள இந்தத் திட்டத்தில் முதிர்வுத் தொகை வரி விதிப்புக்கு உள்பட்டது.பங்குடன் தொடர்புடைய சேமிப்புத் திட்டம் (இ.எல்.எஸ்.எஸ்.) பரஸ்பர நிதி நிறுவனங்கள் நடத்தும் திட்டம். நமது சேமிப்புகள் பங்குச் சந்தையில் ஈடுபடுத்தப்பட்டு நமக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து, 3 ஆண்டுகளுக்கு விலக முடியாது.

இந்த வகை முதலீடுகள் பங்குச் சந்தையின் ஏற்ற-இறக்கங்களுக்கு உள்பட்டது என்றாலும், நீண்ட கால அடிப்படையில் சேமித்து வந்தால் நல்ல வருவாயைத் தருகிறது.சேமிப்புத் திட்டங்களை இளம் வயதில் தொடங்க வேண்டும். அதுதான் நீண்ட கால அடிப்படையில் அதிக வருவாயைத் தரும். ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, இன்றைய நமது சேமிப்பே, வருங்காலத்தில் நமக்கு ஊதியம்.

No comments:

Post a Comment